“சிறையில் உள்ள 36 இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி - dmk
🎬 Watch Now: Feature Video
Published : Oct 27, 2023, 9:43 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார்.
அப்போது மேடையில் பேசிய அவர், “திமுக, சிறையில் உள்ள 36 இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம் என தேர்தலில் வாக்குறுதி அளித்தார்கள். அதை நம்பி மக்கள் வாணியம்பாடியில் 20 ஆயிரம் வாக்குகள் திமுகவிற்கு அதிகம் செலுத்தினார்கள். ஆனால், இதுவரை இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏமாற்றி வருகிறது என கூறுகிறார்கள்.
பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. அதையெல்லாம் முறியடித்து விட்டு வெளிப்படையாக கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இனிவரும் காலங்களில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணியில் இருந்தோம். அதை உணர்ந்து தற்போது வெளியே வந்து இருக்கின்றோம்.
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்க முதலில் ஆதரவு தெரிவித்தவர், ஜெயலலிதாதான். ஆனால் கலாம் என்றால் கலங்கம் என்று கூறி, அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்தான் கருணாநிதி. இஸ்லாமியர்களை ஓட்டுக்காக ஏமாற்றி திமுகவினர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றார்.