Katta Komban elephant: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை துரத்திய கட்ட கொம்பன் யானை!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் அருகே இரும்பு பாலம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கட்ட கொம்பன் காட்டு யானை பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறையினர் யானையை விரட்டியதால் பொதுமக்கள் உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்ட கொம்பன், புல்லட் ராஜா என்கிற இரு ஆண் காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக அப்பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த இரு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானைகள் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட யானை விரட்டும் குழுவினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் இரும்புப் பாலம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கட்ட கொம்பன் யானை, அப்பகுதி பொதுமக்களை விரட்டத் துவங்கியது.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், நான்கு புறங்களும் ஓடினர். இந்நிலையில், வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தனியாக வெளியே வர வேண்டாம் எனவும், யானைகளைக் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.