அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரங்களுடன் சுவாமி ஊர்வலம்!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 19, 2023, 6:07 PM IST
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (நவ.19) காலை உற்சவத்தில், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் எழுந்தருளி மாட விதியில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான இன்று (நவ.19) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மூன்றாம் நாள் காலை உற்சவமான இன்று விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்கப் பூத வாகனத்திலும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின் விநாயகர் மற்றும் சந்திரசேகர் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.