தேனியில் மல்லிகை பூ விலை உயர்வு.. பூக்கள் வரத்து குறைவால் விவசாயிகள் வேதனை!
🎬 Watch Now: Feature Video
தேனி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மல்லிகைப்பூ வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்து கிலோ ரூ.இரண்டாயிரத்து 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூவின் விலை அதிகரித்த போதிலும் வரத்து குறைவால் லாபம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கம்பம், பண்ணைபுரம், சீலையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், வருடந்தோறும் விவசாயிகள் மல்லிகை பூவை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்கள் பூக்கும் தருணத்தில், அரும்புகளில் அழுகள் நோய் ஏற்பட்டு, பூக்களின் விளைச்சலில் பாதிப்பு ஏற்படுவதால் பூக்களின் வரத்து மிக குறைவாக உள்ளது.
மல்லிகை பூவின் வரத்து குறைவாக இருப்பதால், வியாபாரிகள் மல்லிகை மொட்டுக்களை கிலோ ரூ.இரண்டாயிரத்து 200க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், மல்லிகை பூவின் விலை அதிகரித்த போதிலும் வரத்து குறைவால் லாபம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மல்லிகை பூக்களின் விலை உயர்வால் கடைகளில் பூக்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ளதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.