ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் மதுரைவாசிகள்!
🎬 Watch Now: Feature Video
மதுரை: ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய போட்டிகளில், கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அப்போட்டிகளை நடத்த தடைகோரியும், உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கின ஆர்வல அமைப்புகள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் இதுதொடர்பாக நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வந்ததது. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என ஒருமனதாக தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் செல்லும் எனவும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு தமிழ்நாட்டிலுள்ள் அனைத்து மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்குப் பெயர்போன மதுரை மாவட்ட மக்கள் உற்சாக மழையில் உள்ளனர். மேலும், பட்டாசு வெடித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து மதுரை மாவட்டத்திலுள்ள மாடு வளர்ப்பவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கூறுகையில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது” என்கின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்