கோவையில் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளி வாகன பரிசோதனை!! - கோவை மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
கோவை: தமிழ்நாட்டில் வருகின்ற 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சோதனைகளில் வாகனங்களின் தரம், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வசதிகள், ஓட்டுநர்களுக்குக் கண் பரிசோதனை, உடல் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில் பிஆர்எஸ் மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. வாகனங்களின் தரம், முதலுதவி பெட்டிகள், அவசரக் கால வழி உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஓட்டுநர்களுக்குக் கண் பரிசோதனை உடல் பரிசோதனையும் தனியார் மருத்துவமனையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாநகரில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 230 பள்ளிகளில் இருந்து 1355 பள்ளி வாகனங்கள் இன்று சோதனை செய்யப்படுகின்றது என தெரிவித்தார். மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
மேலும் வாகனம் சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய 17 வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பாக அவசர வழி, சிசிடிவி கேமரா, பிரேக், வேக கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ், தீயணைப்பு கருவிகள் போன்றவை இருக்கின்றதா உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் பள்ளி வாகனங்களில் பின்பற்றப்படுகிறதா என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதே போலப் புறநகர்ப் பகுதிகளிலும் பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றார். இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆர்.டி.ஒக்கள் கலந்து கொண்டனர்.