முடிந்தது மீன்பிடித் தடைக்காலம்; அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டது. மன்னார் வளைகுடா பகுதியில் ஜூன் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தும் அதனை பொருட்படுத்தாமல் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று இரவு கரை திரும்பினர். கரை திரும்பிய விசைப்படகுகளில் எதிர்பார்த்த அளவு சாளை மீன், பாறை மீன், ஊளி, விளை மீன், நகரை, அயிலேஷ், கோழி தீவனத்திற்கு பயன்படும் கலசல் மீன்கள் அதிகளவு கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் அங்கு விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் கேரளா மீன் வியாபாரிகள், மீன்களை வாங்க தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.