வால்பாறையில் யானைகள் அட்டகாசம்.. வீட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய யானைக் கூட்டத்தால் மக்கள் அச்சம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட NEPCக்கு சொந்தமான கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நள்ளிரவு 2 மணி அளவில் 9 காட்டு யானைகள் அடங்கிய கூட்டம் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.
பின்னர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களான வனசின்னப்பன், உஷா, கோபி சந்திரிகா, கங்காதரன் சகுந்தலா ஆகியோரின் வீட்டின் சுவரை உடைத்து வீட்டினுள் இருந்த சமையல் உபகரணங்கள் மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்டவைகளை வெளியே இழுத்து துவம்சம் செய்துன. அதன் பின் அப்பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பகுதிக்குள் சென்று கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் கதவுகளை உடைத்தெறிந்து சேதப்படுத்தின.
இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கூட்டத்தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த வார்டு கவுன்சிலர் கனகமணி நேரில் பார்வையிட்டு இரவு வனத்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.