கிடாரிஸ்ட் சந்திரசேகர் காலமானார் - இளையராஜா இரங்கல் வீடியோ! - கிடாரிஸ்ட் சந்திரசேகர் காலமானார்
🎬 Watch Now: Feature Video
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் குழுவில் ஆரம்ப காலத்தில் இருந்து பணியாற்றி வந்தவர் கிடாரிஸ்ட் சந்திரசேகர். ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படத்தில் வரும் ‘இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாடலில் வரும் கிடார் இசையை யாராலும் மறக்க முடியாது.
இதுபோன்ற ஏராளமான பாடல்களுக்கு கிடாரிஸ்ட்டாக பணிபுரிந்தவர் சந்திரசேகர். நிறைய இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவரது கிடார் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இளையராஜா நடத்தும் இசை கச்சேரிகளில் இவரது கிடார் இசை வரும்போது எல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். இவரது சகோதரரான புருஷோத்தமன் இளையராஜா குழுவில் டிரம்மராக இருந்தவர். மேலும் மியூசிக் ஆர்கனைசராகவும் பலகாலம் பணியாற்றியவர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு காலமானார். சந்திரசேகர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கிடார் வாசித்துள்ளார்.
இளையராஜா மட்டுமின்றி கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களிடமும் பணியாற்றியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசைக் குழுவின் தூண்களாக இருந்து வந்த சந்திரசேகர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சந்திரசேகர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, "என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிடித்தமான இசைக் கலைஞர் சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். என்னுடன் இருந்த புருஷோத்தமனின் சகோதரர் சந்திரசேகர். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள்.
நிறைய பாடல்களுக்கு அவர் வாசித்த கிடார் இன்னும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றன. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவு குறித்து உலக சினிமா பாஸ்கரன் தனது முகநூல் பக்கத்தில், "இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு கிடார் வாசித்த சந்திரசேகர் மறைவு.
எம்.எஸ். விஸ்வநாதனின் 'வசந்தகால நதிகளிலே' என்ற பாடலுக்கு மவுத் ஆர்கன் வாசித்ததும் இவரே. அதே போன்று டி.ராஜேந்தர் படங்களுக்கு பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தவரும் இவரே. இசையமைப்பாளர் ஆர் சந்திரசேகர் என்னுடைய விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் மற்றும் மருமகள் மகாலட்சுமி ஆகியோரும் இசைக்கலைஞர்களே.
எல்லோரும் என்னுடைய விளம்பர படத்தில் பணியாற்றியுள்ளார்கள். 1995-2000 வரை என்னுடைய விளம்பர படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு நான் உலக சினிமாவிற்கு வந்த பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது. கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து அசோக் பில்லர் போகும் வழியில் காம்தார் நகரில் அவரது இல்லம் உள்ளது.
எத்தனையோ முறை அவரது இல்லம் தேடி இசையை வாங்கப் போய் இருக்கிறேன். இன்றும் வருகிறேன் சந்திரசேகரன் சார். அன்று ஒரு நாள் எனக்காக வாசித்த இளைய நிலாவை கிடார் இசைக்கருவியில் இன்றும் வாசிப்பீர்களா" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'வாடி ராசாத்தி' கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய சேலம் துணை மேயர்!