இந்து மகா சபா இளைஞரணி தலைவரின் வீட்டுக் காவலாளி மீது தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூவில், அகில பாரத இந்து மகா சபா தென் பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே.சுபாஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (மே 14) இரவு அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சுபாஷ் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வரும் கதிர்வேல் (68) என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் அவரது முகம், மார்பு, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள், இது குறித்து காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல் துறையினர், காவலாளி கதிர்வேலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரைத் தாக்கியதாக சந்தேகிக்கும் நபர்களை பிடித்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் காவலாளி கதிர்வேலை தாக்கியது பதிவாகி உள்ளது.
இதன் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு சுபாஷின் 2 கார்களை தீ வைத்து எரித்தது, அவரது வீட்டில் இருந்த வெளிநாட்டு நாயைக் கொலை செய்தது, சுபாஷை ஒரு முறை தாக்க முயன்றது உள்ளிட்ட வழக்குகள் தடாகம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தின்போது, சுபாஷ் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.