"நடப்போம் நலம் பெறுவோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி ஆய்வு! - health minister Subramanian news
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் "நடப்போம் நலம் பெறுவோம்" (ஹெல்த்வாக்) என்ற திட்டத்தின் கீழ் இன்று (ஆகஸ்ட். 17) மயிலாடுதுறையில் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடந்தே ஆய்வு செய்தார்.
மக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டந்தோறும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.
மேலும், இந்த நடைபாதையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள் என்றும் நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து "நடப்போம் நலம்பெறுவோம்" என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சியை துவங்கி புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.
இந்த நடைபயிற்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உள்ளிட்ட மருத்துவத்துறை, வருவாய்துறை அதிகாரிகள், மாணவ மாணவிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "சசிகலாவால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஆபத்து" - ஜெ.தீபா பரபரப்பு புகார்!