தருமபுரியில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்..ஹனுமனுக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை..!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஹனுமன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதில் தருமபுரி நகரில் உள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஹனுமனை வழிபட்டனர்.
இதில் ஆஞ்சநேயருக்குப் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
அதேபோல் நல்லம்பள்ளி அடுத்துள்ள முத்தம் பட்டி வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரைப் பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
அதேபோல், தொப்பூர் வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மன்ரோகுல ஜெய வீரன் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆப்பிள், துளசி மாலை சாற்றிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி நகரக் காவல் துறையினர் சார்பில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.