கைப்பம்பில் குடிநீர் எடுக்க முடியாமல் சிமெண்ட் சாலை.. வைரலாகும் வீடியோ!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட நூக்காம்பாடி கிராமத்தில் கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்படும். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் கைப்பம்பு பொருத்தி பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கைப்பம்பில் பழுது ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீரின் பற்றாக்குறை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு வாரம் முன்பு அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியின் போது சாலையின் ஓரத்திலிருந்த அந்த கைப்பம்புடன் சேர்த்து கான்கிரீட் பூசப்பட்டு சாலை அமைக்கப்படுள்ளது. இந்நிலையில் அடியில் குடங்களை கீழே வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த கைப்பம்பினை மாற்றிவிட்டு மின்மோட்டாரை பொருத்தி மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கைப்பம்புடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.