Ramadan: ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை! நெல்லையில் வியாபாரிகள் மகிழ்ச்சி - Ramadan
🎬 Watch Now: Feature Video
Ramadan: இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை வெகுவிரைவில் நடக்கயிருப்பதால், அதனையொட்டி நாடு முழுவதும் விழாவிற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் புனித பண்டிகையான ரம்ஜான் நோன்பு காலம் நடைபெற்று ரம்ஜான் நோன்பின் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வருகின்ற வெள்ளிக்கிழமை (ஏப்.21) அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் அதற்கு ஆயத்தம் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இறைச்சிக்கான ஆடுகள் விற்பனை திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தையில் களைகட்டியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சந்தையான மேலப்பாளையம் சந்தைக்கு இன்று (ஏப்.18) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் விற்பனைக்காக தங்களது ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர்.
இதன் காரணமாக, மேலப்பாளையம் சந்தையில் கடுமையான கூட்டம் அலைமோதியது. சுமார் சிறிய ரக ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.3000-த்தில் தொடங்கி ஒவ்வொரு ஆட்டிற்கும் ஏற்றார்போல், விலை நிர்ணயம் செய்யப்பட்டன. அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் விலை வரைக்கும் ஆடுகள் விற்பனை ஆனது.
அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய ரக ஆடுகளும் இந்த முறை விற்பனைக்கு வருகை தந்த நிலையில், அந்த வகையான ஆடுகள் ரூ.8000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது. காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் தரத்திற்கு ஏற்றார்போல், விலையை நிர்ணயம் செய்து, விற்பனை செய்ய அதிகமான இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், தென்காசி மாவட்டம் கடையம், ரெட்டியார்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கால்நடைச் சந்தைகள் நடைபெற உள்ள நிலையில் அங்கும் ஆடு விற்பனை களைகட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்போரும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.