பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை... உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் மகிழ்ச்சி! - விழுப்புரம் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மிகவும் பிரசித்திபெற்றது. இச்சந்தையில் காட்டுச்செல்லூர், குறும்பூர், கிளியூர், மடப்பட்டு, சேந்தநாடு, ஆசனூர், களமருதூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.
இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகளவு வியாபாரிகள் உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் குவிந்தனர்.
சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் ஆகியப் பகுதிகளிலிருந்து ஆடுகளை வாங்க வாடிக்கையாளர்கள் பெரிய வாகனங்களில் வந்ததால் உளுந்தூர்பேட்டை மூன்று முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடந்த வாரம் வரை அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வந்த சந்தையில், நேற்று (ஜூன் 21) ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டுள்ளன. ஆடுகள் முறையே நான்காயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதன் எடை மற்றும் வளர்ச்சிக்கேற்ப விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை தங்களுக்கு லாபமே கிடைத்தது எனவும்; அதிகாலை 5.00 மணி முதலே ஆடுகளின் விற்பனை மும்முராக நடைபெற்றதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
இதையும் படிங்க: "மத்திய அரசை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார்" - விழுப்புரத்தில் விளாசிய சி.வி.சண்முகம்!