இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச சீர்வரிசை உடன் திருமணம்! - Vellore vallimalai murugan temple
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஜோடிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச சீர்வரிசை வழங்கி, கோயில்களில் திருமணம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று (மார்ச் 8) இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒரு ஜோடிக்கு திருமண விழா நடைபெற்றது.
இதில் 4 கிராம் தங்கம், மணமகள் மணமகனுக்கான ஆடைகளுக்கு 3,000 ரூபாய், திருமணத்திற்கு வரும் 20 உறவினர்களுக்கு உணவு, பூமாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட 50,000 மதிப்புள்ள சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வள்ளிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் குடியாத்தத்தைச் சேர்ந்த சிவக்குமார் - இந்துமதி ஜோடி விருப்ப மனு அளித்ததின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார்.
மேலும் இந்த திருமண நிகழ்வில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, வள்ளிமலை ஊராட்சி மன்றத் தலைவர் வாசுகி, பெருமாள் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோடீஸ்வரன் மற்றும் கோயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.