பேரிஜம் ஏரியில் 8 நாட்களாக காட்டு யானைகள் முகாம்.. வனத்துறை மெத்தனம் என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2023, 1:54 PM IST
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பேரிஜம் ஏரிக்கு செல்ல வேண்டுமென்றால் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானை கூட்டம் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனப் பகுதிக்குள் கடந்த 8 நாட்களாக பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
மேலும், வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா வரும் பயணிகள் இந்த பகுதிக்கு செல்ல முடியாமல் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பச் செல்கின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது, "வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை விரட்டி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.