தேனி வராக நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை! - பொதுப்பணித்துறை
🎬 Watch Now: Feature Video
Published : Nov 5, 2023, 11:26 AM IST
தேனி: பெரியகுளம் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் சோத்துப்பாறை அணை நிரம்பியதால் வராக நதியில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் கல்லாறு, செழும்பாறு, கும்பக்கரை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து 462 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வராக நதியில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.