கும்பக்கரை அருவில் திடீர் வெள்ளம்.. மறுக்கரையில் சிக்கிய 30 பேர் நிலை என்ன?
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியகுளம் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதில் தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்ததால் அருவியில் நீர் வரத்து நீர்வரத்து சீராக இருந்தது. பிற்பகலில் பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்த வனத்துறையினர் முன்கூட்டியே சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அருவியில் இருந்து வெளியேற்றினர்.
ஆனாலும், கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மறுகரையில் இருந்தவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கும்பக்கரை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்வதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் கும்பக்கரை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்