உயிரை பணயம் வைத்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து ஆட்டை மீட்ட துரைசிங்கம்.. குவியும் பாராட்டு!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் பகுதியில், ஞானமுத்து என்பவரது தோட்டத்தில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆடு ஒன்று 20 அடி உயரம் கொண்ட தரைமட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. ஞானமுத்து ஆட்டை மீட்க முயற்சித்தும் முடியாததால், இது குறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள், ஆழ்துளை குழியில் சிக்கிக் கொண்டிருந்த ஆட்டினை கயிறு கட்டி மீட்கும் முயற்சியினை மேற்கொண்டனர். ஆனால், ஆட்டை மீட்க முடியாத நிலையில், தீயணைப்பு வீரர் துரைசிங்கம் என்பவரை தலைகீழாக சிறிய ஆழ்துளைக் கிணற்றில் இறக்கி, குழியில் சிக்கிக் கொண்டிருந்த ஆட்டினை பத்திரமாக மீட்டனர்.
இவ்வாறு தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரருக்கு, அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சாத்தான்குளம் வியாபாரிகள் சங்கம் சார்பில், ஆழ்துளைக் கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர் துரைசிங்கத்தின் துணிச்சலை பாராட்டி அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.