திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாமில் திமுக நிர்வாகிகளிடையே கைகலப்பு! - Ponneri Government Higher Secondary School
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18165547-thumbnail-16x9-tpt.jpg)
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய், கருப்பை வாய் புற்றுநோய், பால்வினை நோய், எலும்பு மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
அப்போது வெலக்கல்நாத்தம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசனும் கலந்து கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரியகுமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசன் இருவருக்கும் இடையே நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் டெண்டர் விவகாரத்தில் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதன் காரணமாக இன்று நடைபெற்ற மருத்துவமுகாமில் ஜெயசுந்தரேசன் உடைய மகனான வேல்முருகன் என்பவர், தனது அப்பாவை எவ்வாறு தகாத வார்த்தையில் பேசலாம் எனக் கூறி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சூரியகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக கட்சி நிர்வாகிகளின் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.