ஜோலார்பேட்டையில் சதாப்தி ரயில் நின்று செல்ல ஏற்பாடு: விழாவில் பாஜக- திமுகவினரிடையே தள்ளுமுள்ளு - அமைச்சர் எல் முருகன்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (10/07/2023) முதல் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சதாப்தி ரயிலை கொடியசைத்து அனுப்பி வைக்க இருந்தனர்.
ஆனால், இந்நிகழ்வில் அமைச்சர் முருகன் கலந்து கொள்ளாத நிலையில் திமுக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, நல்ல தம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் குறைந்த நாற்காலிகளே போடப்பட்டிருந்தன. அப்போது முன்னதாக வந்த திமுகவினர் நாற்காலியில் அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் மேடையிலேயே தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பின் கைகலப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சதாப்தி ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்த பின்னர் பாஜகவினர் சென்ற காரின் முன்பு, திமுகவினர் கழகக் கொடி அசைத்து ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.