ராணிபேட்டையில் விவசாயி தற்கொலை முயற்சி: தகாத வார்த்தைகளால் திட்டிய நிதிநிறுவன ஊழியர்கள்! - farmer suicide attempt
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: நெல் அறுவை இயந்திரத்துக்கு மாத தவணை கட்டாததால் தனியார் நிதிநிறுவன ஊழியர்கள், விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வானம்பாடி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பெருமாள் (35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லோன் பெற்று அதன் மூலம் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக அறுவடைக்கு செல்லாமல், நஷ்டம் ஏற்பட்டதால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் தவணை முறை பணத்தை கட்ட கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெருமாளின் வீட்டிற்கு நேரில் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பெருமாள், அந்த ஊழியர்களுக்கு முன்பு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை தற்கொலை முயற்ச்சியில் இருந்து தடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.