தேனி அருகே விவசாயி மரணம்.. மேலும் 8 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி.. தரமற்ற மருந்து காரணம் என புகார்! - வயலில் தரமற்ற உரங்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 2, 2023, 8:34 PM IST
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (42). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கூடலூர் பகுதியில் உள்ள செந்தில் ஏஜென்சி என்ற உர மருந்துக் கடையில், உரம் தெளிப்பதற்குத் தேவையான மருந்துகளை வாங்கி தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள வயல்களில் தெளித்துள்ளார்.
அப்போது உர மருந்து அவரின் உடலில் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் குணசேகரன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இன்று (அக்.02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அதே உரம் மருந்துக் கடையில் உரம் வாங்கி தங்களது வயல்களில் தெளித்த பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் எட்டு பேருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உர மருந்துக் கடையில் தரமற்ற உரம் மருந்தைக் கொடுத்ததால் தான் விவசாயி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் உயிரிழந்த குணசேகரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தரமற்ற உர மருந்துகளை விற்பனை செய்த கடையின் மீதும், அதைத் தயாரித்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த விவசாய குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.