திடீர் வெள்ளத்தால் பெரியகுளம் அருகே ஆற்றின் நடுவே சிக்கிய குடும்பம்.. பத்திரமாக மீட்ட மலை கிராம இளைஞர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 27, 2023, 1:46 PM IST
தேனி: பெரியகுளம் கல்லாற்றை கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றின் நடுவே சிக்கி வெளியேர முடியாமல் தவித்து வந்த நிலையில் அந்த வழியாக வந்த மலை கிராம மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே கடந்த மூன்று தினங்களாக மழைப் பொழிவு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளம் சற்று குறைந்து இருந்தது.
இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சின்னூர் மலைக் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு ஆற்றை கடந்து சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சின்னூர் மலை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக ராமன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கல்லாற்றை கடக்க முயன்ற போது திடீரென ஆற்றில் நீர் அதிகரித்துள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த ராமன் குழந்தைகளுடன் ஆற்றின் நடுவே இருந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளார். இவர்கள் இரண்டு மணி நேரமாக ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மலைக் கிராம இளைஞர்கள் சிலர் ஆற்றின் நடுவே சிக்கியிருந்த குடும்பத்தை கயிறு கட்டி மறுகரைக்கு பத்திரமாக மீட்டு மலை கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.