அவசர உதவி பெட்டியில் காலாவதியான மருந்துகள்.. 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் அதிர்ச்சி! - மாவட்ட ஆட்சியர் மகாபாரதி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 28, 2023, 1:57 PM IST

மயிலாடுதுறை: அகரகீரங்குடி கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வாய்க்கால் தூர் வாரும் பணியினை ஆய்வு செய்தனர். அதிகாரிகள் வருவதால் ஊராட்சி நிர்வாகத்தினர் முன்னேற்பாடு பணிகளைச் செய்திருந்தனர். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு விபத்து ஏற்பட்டு காயம் ஏற்படுதல், மயக்கம், காய்ச்சல் போன்ற உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் அதைச் சரி செய்யும் வகையில் மருத்துவ பாதுகாப்பு முதல் உதவி பெட்டி அதிகாரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. 

அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற நிலையில், உயிர் காக்கும் அந்த முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்துகள் இருந்தது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாத்திரைகள், கிருமிநாசினி, ஓ.ஆர்.எஸ் கரைசல் போன்ற காலாவதியான மருந்துகள் மாற்றப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது திடீரென்று அதிகாரிகள் வந்ததால் முதலுதவி பெட்டியைக் கொண்டு வந்து வைத்ததாகவும், காலாவதியான பொருட்களை மாற்றி விடுவோம் என்று அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். முதலுதவி பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதியான தேதியைப் பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் மருந்துகள் வைக்கப்பட்டு இருந்ததைப் பொதுமக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

மேலும், கவனக் குறைவாக அவசர தேவைக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முதலுதவி பெட்டிகளைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்குச் சரியான அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை - சீரடி விமானம் ரத்து: பயணிகள் உள்ளிருப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.