"இந்த ஜென்மங்கள் ஏன் உயிரோடு இருக்குதுனு தெரியல" - நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு வீடியோ! - Tiruttani school problem
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூர்: அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசியும், குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார். நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மர்ம நபர்கள் மனித மலத்தை பூசி சேதப்படுத்தியதாக மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட். 19) வகுப்பறைகளை புறக்கணித்து, பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், "பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தியைப் பார்த்தேன். அதை கேட்டபோது உடம்பே கூசியது. என்ன ஜென்மம் இவர்கள்? உங்களுக்கு அறிவு இல்லையா? மனித கழிவை பள்ளியின் பூட்டுகளிலும், சுவர்களிலும் பூசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த ஜென்மங்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?" என்று வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் நீங்கள் மனித மலத்தை அனைத்து பூட்டுகளிலும் பூசியதை நினைத்தால் அருவருப்பாக உள்ளது.
இரு கரங்களையும் கூப்பி கேட்டுக்கொள்கிறேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.