கோழிக் கழிவுகளை ஆற்றில் கொட்டிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே பள்ளிபாளையம் வழியாக சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதியில் சாயக்கழிவு தண்ணீர் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் ஆற்றின் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பல்வேறு வகையான நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் திருச்செங்கோட்டில் கோழிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனத்தில் கோழிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளார்.
இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இதனைத் தொடர்ந்து, “நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின்” சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார் காவிரி ஆற்றில் கோழிக் கழிவுகளை கொட்டிய ராஜபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இதையும் படிங்க:மயானங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!