எல்லைக்கட்டு திருவிழா: நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் ஊரைச் சுற்றி வலம் வந்த இளைஞர்கள்!
🎬 Watch Now: Feature Video
கடலூர்: தென்னிந்தியாவின் சிவ தலங்களில் முக்கிய ஆலயமாகத்திகழ்கிறது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு எல்லைக்கட்டு நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக பிடாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கிடா பலியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்கெட் காலனி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திய படி ஊரை சுற்றி வலம் வந்தனர். மேலும் இந்த திருவிழா சிறப்பாக நடைபெறவும், பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவே இந்த எல்லைக்கட்டு திருவிழா நடைபெறுவது ஐதீகம் எனக் கூறப்படுகிறது.
இந்த எல்லைக்கட்டு திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு வாகனங்களுடன் பின் தொடர்ந்து சென்றனர். முக்கிய திருவிழாக்களில் வரும் 29ஆம் தேதி திருவடச்சான் மற்றும் ஜூன் 2 ஆம் தேதி தேர்த் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.