சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 668 யானைகள்! அதிகரித்து வரும் யானைகளால் வனத்துறையினர் மகிழ்ச்சி - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: 2023 ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பின் படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 668 யானைகள் உள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023 அறிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 9) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். தமிழ்நாடு வனத்துறை கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை கடந்த மே மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தியது.
இந்த கணக்கெடுப்பில் 2017ஆம் ஆண்டு 2761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 2961ஆக அதிகரித்துள்ளது தற்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 668 யானைகளும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 790 யானைகளும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 211 யானைகளும் இருப்பதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.