ஈஸ்டர் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக மீன்களின் விலை கடும் வீழ்ச்சி - Easter
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஈஸ்டர் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக தூத்துக்குடியில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்த, 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் தங்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
இன்று (ஏப்ரல் 1) சனிக்கிழமை என்பதால், அதிக அளவு நாட்டுப்படகுகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், குறைவான படகுகளே கரை திரும்பின. இந்த படகுகளிலும் மீன் வரத்து குறைவாகவே காணப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்காக நோன்பு இருப்பதாலும், இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதாலும், மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இங்கு வழக்கமாக, கிலோ 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடிய சீலா மீன் 620 ரூபாய் வரையும், கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடிய விளை மீன் 300 ரூபாய் வரையும், கிலோ 400 ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடிய ஊளி மீன் 220 ரூபாய் வரையும் , கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடிய பன்டாரி மீன் 150 ரூபாய் வரையும், கிலோ 120 ருபாய் செல்லக்கூடிய ஐலேஷ் மீன் 70 ரூபாய் வரையும், கிலோ 500 ரூபாய் வரை செல்லக்கூடிய கிழிஞ்சான் வகை மீன் 300 ரூபாய்க்கும் விற்பனையானது. சாலை மீன்கள் ஒரு கூடை ரூ.700 வரை விற்பனையானது.
மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகை முடிந்து அடுத்த வாரம் மீன்களின் விலை பழைய நிலைக்கு திரும்பும் என்று மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.