Theni: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்! - theni district
🎬 Watch Now: Feature Video
தேனி: போதிய அளவில் பேருந்து வசதி இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இராயப்பன்பட்டியில் மூன்று அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. உத்தமபாளையம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர்.
இந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்ல அரசுப்பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் வந்து செல்லும் சூழலில், பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது மாணவ மாணவியர்கள் முண்டியடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் ஆபத்தான சூழ்நிலையில் பயணம் செய்கின்றனர். போதிய அளவில் அரசுப் பேருந்துகள், அந்த பகுதி கிராமங்களுக்கு இயக்கப்படாததால் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய ஆபத்தான பயணத்தால் மாணவர்கள் கீழே விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பள்ளி சென்று வரும் மாணவ மாணவிகளின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.