ராமச்சந்திராபுரத்தில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சந்திராபுரத்தில் இயங்கி வரும் மாதர்பாக்கம் துணை மின் நிலையம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரங்களில் தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்படுகின்றது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கிராமப் பகுதிகளில் இரவு, பகல் பாராமல் பல முறை மின் இணைப்பு பல மணி நேரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 21) மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. ஆனால் 14 மணி நேரத்தை கடந்தும் மின் விநியோகம் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் பகிர்மான பிரிவு அலுவலக தொடர்பு எண்ணும் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாதர்பாக்கம் மின் பகிர்மான பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் வர தாமதமானதால் மாதர்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து விரைந்து வந்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.