கால பைரவரின் வாகனம் ஆலய கருவறையில் சுவாமி தரிசனம்.. நாயின் வழிபாடு கண்டு பக்தர்கள் மெய்சிலிர்ப்பு..
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இன்று (ஜூலை 10) தேய்பிறை அஷ்டமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலையிலேயே கோயிலில் கூடி இருந்தனர். விஷேச நாள் என்பதால் காலையிலேயே காலபைரவர் சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து காலபைரவர் தங்க அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாளித்தார். தீபாராதனை முடிந்த பிறகு கோயில் வளாகத்திலேயே எப்பொழுதும் இருக்கும் கால பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய், கோயிலின் கருவறை வரை நேரடியாக சென்று சுவாமியை ஒரு சுற்று சுற்றி மீண்டும் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறியது.
இந்த சம்பவம் கோயிலில் காலபைரவரை வணங்க வந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இது குறித்து கேட்ட போது வழக்கமாக காலபைரவருக்கு தீபாராதனை முடிந்த பிறகு நாய் கருவறை வரை சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு வெளியே வந்துவிடும் என்று தெரிவித்தனர்.
இன்று தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கோவிலில் குவிந்ததால் பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து பின் தங்கள் வேண்டுதலை சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.