பாலியல் தொல்லை - திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது! - கொடைக்கானலில் காங்கிரஸ் பிரமுகர் கைது
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர், அப்துல் கனிராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
கடந்த 7ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், அவரது மனைவி உள்ளிட்டோர், நாயுடுபுரம் பகுதியில் உள்ள அப்துல் கனிராஜாவுக்குச் சொந்தமான விடுதியில் இரண்டு அறைகள் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது வழக்கறிஞரின் மனைவியான பெண் வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகத் தெரிகிறது. உடன் வந்தவர்கள் சுற்றுலாத் தலங்களைக் காண சென்றுவிட்ட நிலையில், வழக்கறிஞரின் மனைவி மட்டும் அறையிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், அப்துல் கனி ராஜா, வழக்கறிஞரின் மனைவி தங்கியிருந்த அறைக்குச் சென்று, அவருக்கு மருத்துவ உதவி செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, வழக்கறிஞரின் மனைவி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனிராஜாவை கைது செய்தனர்.
பின்னர், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில், மேல் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அப்துல்கனி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லும்போது, காவல்நிலைய வாசலில் அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அப்துல்கனி ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மதுபோதையில் திருநங்கை மீது தாக்குதல்.. வைரல் வீடியோ!