நெல்லையில் நடுரோட்டில் கவிழ்ந்த டீசல் லாரி; பதற்றத்தில் ஓட்டம் பிடித்த ஓட்டுநர்! - லாரி விபத்து
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுவரப்படும் டீசல், பெட்ரோலை சேமித்து வைப்பதற்காக தச்சநல்லூர் செல்லும் சாலையில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியில் டீசல் நிரப்பப்பட்டு கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது. பெட்ரோல், டீசல் நிரப்பும் மையத்திலிருந்து சிறிது தூரத்தில் தச்சநல்லூர் சாலையை நோக்கி இந்த லாரி சென்றபோது வளைவு பகுதியில் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், நடத்துனர் இருவரும் லாரியில் இருந்து குதித்து தப்பினர். தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, டீசல் லாரி தீப்பிடிக்காமல் இருப்பதற்காக ஃபோம் நுரை லாரி மீது அடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு கிரேன் மூலம் லாரியும் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் தீயணைப்பு வீரர்களும், பெட்ரோல் டீசல் சேமிப்பு மைய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.