தருமபுரி காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம் - வேறு சமூகம் என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு - அரவிந்தன்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஏ. பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் அரவிந்தன் (வயது 23) பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த அரூர் வர்ணதீர்த்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் அனிதா (வயது 23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அனிதா எம்.எஸ்.சி., முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அனிதா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான அரவிந்தனுடன் ஏ. பள்ளிப்பட்டி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை அடுத்து இருவீட்டாருக்கும் பயந்த காதல் ஜோடி, ஏ. பள்ளிபட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே இருவருக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த செய்தி அறிந்த உறவினா்கள் காவல் நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.