இலங்கையில் நிலநடுக்கம் எதிரொலி; திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: இலங்கையில் தென் கிழக்கு கடற்பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகத் தகவல் வெளியானதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து 1,326 கிமீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 10 கிமீ ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவ.13) யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை அடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் குளிப்பது வழக்கும்.
இந்நிலையில் இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் எதிரொலியாகத் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும பக்தர்கள் கடற்கரையில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.