நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது ஏன் கேஸ் போடல? - சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி அமைக்கும் பணியில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின் குடும்பத்தார் 30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டதாக, அவர் தலைமையின் கீழ் நிதித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் நேர்மையான முறையில் பதிவுகளை வெளியிடும் அதிமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர். ஆனால், ஸ்டாலின் குடும்பத்தார் ஊழலில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் வெளியிட்ட ஆடியோவிற்கு ஏன் இதுவரை உரிய விசாரணை நடத்தப்படவில்லை?
ஏன் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை? இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 30 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. எனவே, இன்னும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அவ்வளவு பணத்தை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிப்பார்கள்" என கூறினார்.