சீத்தக்காடு தடுப்பணையில் உலா வரும் முதலைகள்.. வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 12:13 PM IST
திருப்பூர்: தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ள சீத்தக்காட்டில், அமராவதி ஆற்றின் கரையோரp பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து, கோயிலில் கிடா வெட்டி சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
மேலும் இங்குள்ள ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணையின் கரையில் விவசாயிகளும், தொழிலாளர்களும் நடந்து அக்கரைக்குச் சென்று விவசாயப் பணிகளை கவனிப்பது வழக்கம். கடந்த 7 வருடங்களுக்கு முன் அமராவதி அணையில் இருந்து தப்பி வந்த 4 முதலைகள் இப்பகுதியில் நடமாடி வந்த நிலையில், 2 முதலைகளை வனத்துறையினர் பிடித்தனர்.
2 முதலைகள் பிடிபடாமல் இருந்த நிலையில், நேற்று தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 8 அடி நீள முதலை படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர். அவர்களின் சத்தத்தைக் கேட்ட முதலை, மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தது.
இதனை அடுத்து, முதலையைப் பிடித்துச் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.