ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
🎬 Watch Now: Feature Video
தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமான குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த பரவலான மழை காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, வார நாட்களிலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் தென்காசியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால், மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பு காரணமாக சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக குற்றால அருவியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.