உலக நதிகள் தினம் : சண்முக நதியில் 5 டன் குப்பைகளை அகற்றி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு! - garbage at Shanmugha River bank

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 1:34 PM IST

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் புனித நதியாக சண்முக நதி விளங்குகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் சண்முக நதி ஆற்றங்கரையில் புனித நீராடிவிட்டு தான் முருகனை வழிபட்டு வருகின்றனர். 

பழனி சண்முக நதி, பழனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருவாகி தாராபுரம் வரை சென்று அமராவதி ஆற்றில் இணைந்து பின்னர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சண்முக நதி அசுத்தமாக காணப்பட்டு வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். 

சண்முக நதி நீரின் பாசனத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் சண்முக நதிக் கரையில் பக்தர்கள் நீராடி விட்டு பழைய துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள், பூ மாலைகள், பாட்டில்களை போட்டு அசுத்தம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். 

இதனையடுத்து நேற்று (செப். 24) உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நதியை சுத்தம் செய்யும் நோக்கில் சுப்பிரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். சண்முக நதியை தூய்மையாக பராமரிக்க வேண்டும், நதியை பாதுகாக்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

இந்த பணியில் சண்முகநதி கரையில் இருந்து ஐந்து டன் குப்பைகளை சிவகிரிபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் அகற்றினர். மாணவர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பழனி மற்றும் சண்முக நதியை தூய்மையாக பராமரிக்க கல்லூரி மாணவர்கள் முயற்சி மேற்கொள்ளப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.