பொன்னமராவதி அருகே முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்! - ஆர் பாலக்குறிச்சியில் தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சியில் சித்திரை பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் துவங்குவதற்கு முன் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 15 நாள் மண்டகப்படி நடைபெற்றது.
இதில் இரவில் தினமும் அம்மன் திருவீதி உலா வந்ததோடு, பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து 15-வது நாள் பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து முத்துமாரியம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும் மாவிளக்கு வைத்தும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்த பிறகு, அம்மன் வீற்றிருந்த அந்த அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
மேலும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பின்னர் தேர் கோயில் முன்பு நிலைக்குத்தியது. இந்த தேரோட்டத்தை காண சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.