புடவை கடையில் கைவரிசை காட்டிய ஆந்திர பெண்கள்... ரூ.5 லட்சம் மதிப்பிலான புடவைகள் திருட்டு!
🎬 Watch Now: Feature Video
சென்னை: சாஸ்திரி நகர்ப் பகுதியில் சுஷில் பொட்டிக் என்கின்ற ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த புதன்கிழமை (நவ.08) அன்று, 7 பெண்கள் கொண்ட கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புடவைகளை வாங்கிச் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களில் சிலர், தங்களுடைய புடவைக்குள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புடவைகளை மறைத்துத் திருடிச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, வழக்கம்போல் இரவு கடையை மூடுவதற்கு முன்பாக கடை உரிமையாளர் புடவைகளைச் சோதனை செய்துள்ளார். அப்போது, பல விலை உயர்ந்த புடவைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளார். அதில், ஐந்து பெண்கள் தங்களுடைய புடவைகளுக்குள், புது புடவைகளை மறைத்து எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து, ஜவுளிக் கடை உரிமையாளர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஜவுளிக் கடையில் பதிவான அந்த பெண்களின் தொலைப்பேசி எண்ணை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்ததில், விஜயவாடா பகுதியில் இவர்கள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சென்னை காவல்துறை விஜயவாடா காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த பெண்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள புடவைகளை, சம்பந்தப்பட்ட ஜவுளிக் கடைக்கு கொரியர் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாகச் சென்னை காவல்துறை புடவைகளைத் திருடிய பெண்களைக் கைது செய்வார்களா என்பது தெரியவில்லை என ஜவுளிக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.