இதெப்படி.. கமல்ஹாசன் பாடலை பாடி பாஜகவினர் டாஸ்மாக் ஒழிப்பு போராட்டம்..! - tamil news
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் திமுக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பாடலைப் பாடி, பாஜக ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். அதனை தொடர்ந்து, அக்கட்சியின் மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் பொழுது கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும், அதை தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், "தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளையும் குறைக்க வேண்டும். அழிவு பாதையை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கி இருக்கும் அரசு, விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை.
பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றோம். கள் ஒரு சத்தான உணவு. அதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. ஆனால் மிகவும் உடலுக்கு கெடுதியான சாராயத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றது" என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஆளுநராக நான் இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருப்பேன்" - அண்ணாமலை!