பொய்யான வீடியோவால் பீகார் தொழிலாளர்கள் பீதி: அதிகாரிகள் குழு பேட்டி - பொய்யான வீடியோவால் தொழிலாளர்கள் பீதி
🎬 Watch Now: Feature Video
கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக, பொய்யான 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்தது. இதற்கிடையே புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நல ஆணையர் அலோக்குமார், சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் ஆகியோர் கொண்ட குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இக்குழு சென்னை, திருப்பூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று (மார்ச் 6) கோவையில் ஆய்வு நடத்தியது.
பீகார் மாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து ஆலோசனையும் நடத்தினர். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன், பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், "கோவையில் தங்கியுள்ள பீகார் மாநில புலம் பெயர் தொழிலாளர்களிடம் ஆலோசித்தோம். அவர்கள் சில கோரிக்கைகளை எங்களிடம் தெரிவித்தனர். அதை மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளோம்.
இணையத்தில் பரவிய பொய்யான வீடியோக்களால் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் சற்று பயந்துள்ளனர். இன்னும் லேசான பயம் அவர்களுக்கு உள்ளது. எனினும், இணையத்தில் பரவியது வதந்தி என்பது அவர்களுக்கு புரிந்துள்ளது. பொய்யான வீடியோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் கோவை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது" என்றார்.