குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென் மாவட்டங்களின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டம் ஆகும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் குற்றால சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த குற்றால சீசனை அனுபவிக்க ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது உண்டு. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள். அருவிகளில் ஆனந்தமாக குளித்து இந்த சீசனை அனுபவிப்பார்கள்.
கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று (ஜூன் 19) மாலை நேரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தண்ணீர் வரத்து சீராக கொட்டி வந்த நிலையிலும் தொடர் மழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான குற்றால சீசன் சாரல் மழையுடன் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள கரையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காட்டை அழித்து குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு.. கிணற்றில் குதித்த இரு பெண்களால் பரபரப்பு!