Courtallam Falls: குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2023, 10:38 AM IST
தென்காசி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. குற்றாலம் அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
நேற்று (செப். 3) காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றத்துடன் பார்வையிட்டு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று இரவு (செப். 3) முழுவதும் பெய்த மழையினால் இன்று(செப். 4) அதிகாலையில் இருந்து தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளப்பெருக்கு போன்று தண்ணீர் வரத்து இல்லை என்றாலும், அருவிகளில் விழும் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு காரணங்கள் கருதி குற்றாலம் மெயிம் அருவி பகுதியிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
நிர்வாகத்தில் இந்த தடையினால் குற்றால அருவியில் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அருவிக் கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.