ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி: சதி வேலையா? போலீசார் விசாரணை.. - சதி வேலை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-06-2023/640-480-18819834-thumbnail-16x9-railway.jpg)
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே நெடுங்குளம் ரயில்வே கேட் உள்ளது. இதில் விஷ்ணு என்பவர் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுவது வழக்கம். மேலும் நெடுங்குளம், தாழைகுளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பொதுமக்கள் இந்த ரயில்வே கேட் வழியாகக்தான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 22) அதிகாலை விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு பேர், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து அந்த கும்பல், கேட் கீப்பர் அறையில் இருந்த தொலைபேசிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் பெட்ரோல் பாட்டிலை அறையில் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர். நல்வாய்ப்பாக தீ பிடிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சரக்கு வாகன ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து!