வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; 34 வகையான பொருட்களால் அபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ளது, வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோயில். வானர அரசரான வாலி, இவ்வூரில் உள்ள ஈசனை பூஜித்து வழிபட்டதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் நடராஜப் பெருமான் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், சந்தானதி தைலம், பழ வகைகள், திருநீறு, அரிசி மாவு, புனிதத் தீர்த்தம் உள்ளிட்ட 34 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. திருவாதிரை விரதம் மேற்கொண்டு நடராஜரை தரிசனம் செய்வது என்பது ஐதீகம் என்பதால் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பிரம்மதேசம், பெரம்பலூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.